தினமும் ஒரு திருக்குறள் தினமும் ஒரு திருக்குறள்
0 0
SHARE WITH OTHERS
SITE SENSE TAGS
See new updates

தினமும் ஒரு திருக்குறள்

Latest Updates

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலமான ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது. தருண் விஜய் எம்.பி. முயற்சியின்பேரில் இந்த சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக அவர், தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் வழங்கி உள்ளார்.

சிலை அமைப்புக்கான அடிக்கல் திறப்பு விழா தலைநகர் டேராடூனில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழ்ப்புத்தாண்டான நேற்று நடைபெற்றது. அந்த மாநில கவர்னர் கே.கே.பால் விழாவில் கலந்து கொண்டு அடிக்கல்லை திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ‘தமிழ் புலவர் திருவள்ளுவர் வருங்கால பல தலைமுறை மக்களுக்கும் நல்வழி காட்டி உள்ளார். இது இந்திய மக்கள் அனைவருக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இந்திய ஒருமைப்பாட்டுக்காக திருக்குறளை இந்தி மற்றும் அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்’ என்றார்.

   Over a month ago
SEND

ஒரே இடத்தில் 2372 பேர் திருக்குறள் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி சாதனை:

திண்டுக்கல்லில் உலக பொதுமறையில் உலக சாதனை என்ற தலைப்பில் ஒரே இடத்தில் 2372 பேர் திருக்குறள் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி சாதனை நிகழ்த்தபட்டது.

திண்டுக்கல் ஆடவல்லான் இசை ஆலய அறக்ககட்டளை மற்றும் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியும் இணைந்து உலக பொதுமைறையில் உலகசாதனை என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தினர்.

இதில் திருக்குறள் பாடலுக்கு 2372 நாட்டிய பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒரே இடத்தில் தொடர்ந்து 26 நிமிடங்கள் நடனமாடி ஆசிய சாதனை நிறுவனத்தின் சான்றிதழ்களை பெற்று சாதனை படைத்தனர். இந்த சாதனை நிகழ்வினை காண பொற்றேர்கள் பொதுமக்கள் என ஏறாளமானேர் கூடியிருந்தனர்.

   Over a month ago
SEND

சென்னை மழைக்கு திருக்குறளில் தீர்வு: நாடாளுமன்ற வளாகத்தில் வைரமுத்து பேச்சு

“கெடுப்பதும் மழைதான்; கெட்டவர்களை மீண்டும் வாழவைப்பதும் மழைதான்” என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். சென்னை மழைக்கு திருக்குறள் தீர்வு சொல்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) திருக்குறள் திருவிழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 133 மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பின் விழாவில் வைரமுத்து பேசியதாவது:

''இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஒலிப்பதைத் தமிழுக்குக் கிடைத்த தேசியப் பெருமை என்று கருதுகிறேன். திருக்குறளின் மொத்த அதிகாரங்களையும் மூளைக்குள் எழுதிக்கொண்ட 133 கண்மணிகள் இந்த நாடாளுமன்றத்துக்குள் வந்திருக்கிறார்கள்.

இந்த மாபெரும் பணியைச் செய்த மக்களவை உறுப்பினர் தருண் விஜய்க்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அதிகாரம் உள்ளவர்கள்தாம் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும். இந்தக் குழந்தைகளும் அதிகாரத்தோடுதான் நாடாளுமன்றத்துக்குள் வந்திருக்கிறார்கள், திருக்குறளின் 133 அதிகாரங்களோடு.

திருக்குறள் மனிதனைப் பேசுகிறது. ஆனால் அது தமிழன் - வங்காளி - மலையாளி - மராட்டியன் - தெலுங்கன் என்று இனம் பிரித்துப் பேசவில்லை. சொல்லப்போனால் தமிழ் என்ற சொல்லே திருக்குறளில் இல்லை. திருக்குறள் நிலம் பேசுகிறது. ஆனால் அது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என்று நாடு பிரிக்கவில்லை. எல்லா நிலத்திற்கும் எல்லா இனத்துக்கும் காற்றைப்போல் சூரியனைப்போல் பொதுவாகவே திருக்குறள் படைக்கப்பட்டிருக்கிறது.

இன்று இந்த உலகத்தின் தலைக்குமேல் ஆடிக்கொண்டிருக்கிற வன்முறை என்ற கத்திக்கு எதிராக மனித மனங்களைச் சலவை செய்கிறது திருக்குறள். மனித குலத்தின் பெருஞ்செய்தியாக அது அன்பையே ஓதுகிறது. திருக்குறள்தான் டால்ஸ்டாய் என்ற ரஷ்யப் படைப்பாளிக்கு அகிம்சையைக் கற்றுத் தந்திருக்கிறது. “அகிம்சை என்ற தத்துவத்தை ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளில் இருந்துதான் நான் பெற்றுக்கொண்டேன்” (I have taken the concept of non-violence from a German Translation of Thirukkural) இது லியோ டால்ஸ்டாயின் ஒப்புதல் வாக்குமூலம்.

புவி வெப்பமாதல்தான் அகில உலகமும் எதிர்கொள்ளவேண்டிய உடனடிப் பெரும் பிரச்சனை. இன்னும் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமானால் 33 விழுக்காடு விலங்கினங்கள் பூமியிலிருந்தே காணாமல் போய்விடும். இப்போது பாரீஸில் நிகழ்ந்த பருவநிலைமாற்ற உச்சி மாநாட்டில் எட்டப்பட்டிருக்கிற முடிவுதான் மனிதகுலத்தின் நிகழ்கால நிமிடத் தேவை.

“தாமதப்படுத்த வேண்டியவற்றைத் தாமதப்படுத்து; தாமதிக்கக் கூடாதவற்றைத் தாமதப்படுத்தாதே”

இதைத்தான் -

“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை” என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாக மேலாண்மைத் தத்துவமாக வள்ளுவம் உலகுக்கு வழங்கியது.

இந்த மாத மழையில் எங்கள் சென்னை மூழ்கிவிட்டது. மழைத் தண்ணீர் மனிதர்களைக் குடித்துவிட்டுப் போய்விட்டது. எங்கள் வானம் பகலைத் தொலைத்துவிட்டது. இது ஒரு நூற்றாண்டின் பேரழிவு. இந்தத் துயரம் பற்றியும் அதிலிருந்து மீள்வது பற்றியும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறள் எங்களுக்கு வழிகாட்டுகிறது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்பாய் மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை” என்பது குறள்.

ஆதாரங்களை அழித்த அதே மழை நீரைப் பயன்படுத்தி அவர்கள் ஆதாயங்களை ஈட்டுவார்கள். வள்ளுவர் எங்களுக்கு வழங்கிய வாழ்க்கைப்பாடம் இதுதான். இப்படி வாழ்வுக்கு வழிகாட்டுவதால்தான் திருக்குறள் இன்னும் உயிர்ப்போடு விளங்குகிறது.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருவள்ளுவர் கொண்டாடப்படுவதில் இமயம் குமரிக்கு வந்து குடைபிடிப்பதாய் மகிழ்கிறோம்.

இந்தியாவின் எல்லா தேசிய இனங்களிலும் உள்ள ஞானச் செல்வங்கள் இப்படி அடையாளம் காணப்பட வேண்டும்; ஆராதிக்கப்பட வேண்டும்'' என்று வைரமுத்து பேசினார்.

   Over a month ago
SEND

நாடாளுமன்ற வளாகத்தில் திருக்குறளை ஒப்புவித்த மாணவர்கள் : அனைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்க்க மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: நாட்டிலுள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 133 மாணவர்கள் நாட்டிலேயே முதல் முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் திருக்குறள் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 133 மாணவர்களும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் திருக்குறளை ஒப்புவித்தனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள அரங்கில் 133 மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 26 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும் என்று கூறினார்.

பிறந்த பூமியையும், மொழியையும் தாயை போல குழந்தைகள் போற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்தார். திருவள்ளுவர் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவைத் துணைத் தலைவர் குரியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ராஜா, டி.கே. ராஜா, கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

   Over a month ago
SEND

"நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒப்பிக்கும் விழாவில் திருப்பூர் பள்ளி மாணவி கா.ஓவியா பங்கேற்க உள்ளார்.

தமிழகத்தில் மொத்தமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 133 பேருக்கு தில்லியில், மக்களவை வளாகத்தில் மத்திய அமைச்சர் உள்ளிட்டோரால் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

திருக்குறள் மாணவர்-இளைஞர் மன்றம் சார்பில் இந்தியா முழுவதும் திருக்குறளை பரவச் செய்யும் நோக்கில், பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் பிழையின்றி எழுதுதல் போட்டி மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த நவம்பர் முதல் தேதி நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 133 பேரின் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதில், திருப்பூர், பாளையக்காடு எம்.என்.சிக்கண்ணஞ் செட்டியார் மெட்ரிக் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி கா.ஓவியா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாணவி இவர் என்பதுடன், தேர்வு செய்யப்பட்ட 133 பேரில் குறைந்த வயது உடையவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளில் உள்ள 1, 330 குறள்களில் எந்தக் குறளின் முதல் வார்த்தையை சொன்னாலும் அந்தக் குறளைக் கூறி, பிழையின்றி எழுதும் திறனுடையவர் ஓவியா. மேலும் 133 அதிகாரங்களில் ஓர் அதிகாரத்தை கூறி, அதில் குறளின் எண்ணைக் கூறினால் அந்தக் குறளை சரியாக ஒப்பிப்பாராம்.

இவரது தந்தை ஆர்.கார்த்திகேயன் திருப்பூரில் உள்ள தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

   Over a month ago
SEND